பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருநீடூர்
வ.எண் பாடல்
1

ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை, ஒண்நுதல்-தனிக் கண் நுதலானை,
கார் அது ஆர் கறை மாமிடற்றானை, கருதலார் புரம் மூன்று எரித்தானை,
நீரில் வாளை, வரால், குதி கொள்ளும் நிறை புனல் கழனிச் செல்வம் நீடூர்ப்
பார் உளார் பரவித் தொழ நின்ற பரமனை, பணியா விடல் ஆமே?

2

துன்னு வார்சடைத் மதியானை, துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை,
பன்னு நால்மறை பாட வல்லானை, பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை,
என்னை இன் அருள் எய்துவிப்பானை, ஏதிலார் தமக்கு ஏதிலன் தன்னை,
புன்னை, மாதவிப்போது, அலர் நீடூர்ப் புனிதனை, பணியா விடல் ஆமே?

3

கொல்லும் மூ இலை வேல் உடையானை, கொடிய காலனையும் குமைத்தானை,
நல்லவா நெறி காட்டுவிப்பானை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை,
அல்லல் இல் அருளே புரிவானை, ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர்க்
கொல்லை வெள் எருது ஏற வல்லானை, கூறி நாம் பணியா விடல் ஆமே?

4

தோடு காது இடு தூநெறியானை, தோற்றமும் துறப்பு ஆயவன் தன்னை,
பாடு மாமறை பாட வல்லானை, பைம்பொழில் குயில் கூவிட, மாடே
ஆடு மா மயில் அன்னமோடு ஆட, அலை புனல் கழனி திரு நீடூர்
வேடன் ஆய பிரான் அவன் தன்னை, விரும்பி நாம் பணியா விடல் ஆமே?

5

குற்றம் ஒன்று அடியார் இலர் ஆனால் கூடும் ஆறு அதனைக் கொடுப்பானை,
கற்ற கல்வியிலும்(ம்) இனியானை, காணப் பேணுமவர்க்கு எளியானை,
முற்ற அஞ்சும் துறந்திருப்பானை, மூவரின் முதல் ஆயவன் தன்னை,
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர்த் தோன்றலை, பணியா விடல் ஆமே?

6

கா(ட்)டில் ஆடிய கண் நுதலானை, காலனைக் கடிந்திட்ட பிரானை,
பாடி ஆடும் பரிசே புரிந்தானை, பற்றினோடு சுற்றம்(ம்) ஒழிப்பானை,
தேடி மால் அயன் காண்பு அரியானை, சித்தமும் தெளிவார்க்கு எளியானை,
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர்க் கூத்தனை, பணியா விடல் ஆமே?

7

விட்டு இலங்கு எரி ஆர் கையினானை, வீடு இலாத வியன் புகழானை,
கட்டு வாங்கம் தரித்த பிரானை, காதில் ஆர் கனகக்குழையானை,
விட்டு இலங்கு புரிநூல் உடையானை, வீந்தவர் தலை ஓடு கையானை,
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர்க் கண்டு நாம் பணியா விடல் ஆமே?

8

மாயம் ஆய மனம் கெடுப்பானை, மனத்துளே மதி ஆய் இருப்பானை,
காய மாயமும் ஆக்குவிப்பானை, காற்றும் ஆய்க் கனல் ஆய்க் கழிப்பானை,
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை, ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை,
வேய் கொள் தோள் உமை பாகனை, நீடூர் வேந்தனை, பணியா விடல் ஆமே?

9

கண்டமும் கறுத்திட்ட பிரானை, காணப் பேணுமவர்க்கு எளியானை,
தொண்டரைப் பெரிதும்(ம்) உகப்பானை, துன்பமும் துறந்து இன்பு இனியானை,
பண்டை வல்வினைகள் கெடுப்பானை, பாகம் மாமதி ஆயவன் தன்னை,
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர்க் கேண்மையால் பணியா விடல் ஆமே?

10

அல்லல் உள்ளன தீர்த்திடுவானை, அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை,
கொல்லை வல் அரவம்(ம்) அசைத்தானை, கோலம் ஆர் கரியின்(ன்) உரியானை,
நல்லவர்க்கு அணி ஆனவன் தன்னை, நானும் காதல் செய்கின்ற பிரானை,
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே?

11

பேர் ஓர் ஆயிரமும்(ம்) உடையானை, பேசினால் பெரிதும்(ம்) இனியானை,
நீர் ஊர் வார் சடை நின்மலன் தன்னை, நீடூர் நின்று உகந்திட்ட பிரானை,
ஆரூரன்(ன்) அடி காண்பதற்கு அன்பு ஆய் ஆதரித்து அழைத்திட்ட இம் மாலை
பார் ஊரும் பரவித் தொழ வல்லார், பத்தராய் முத்தி தாம் பெறுவாரே.