பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்கருப்பறியலூர்
வ.எண் பாடல்
1

சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம்
கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவக் கண்டானை; கருப்பறியலூர்,
கொய்ம் மாவின் மலர்ச் சோலைக் குயில் பாட மயில் ஆடும், கொகுடிக் கோயில்
எம்மானை; மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .

2

நீற்(ற்)று ஆரும் மேனியராய் நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும்
காற்றானை, தீயானை, கதிரானை, மதியானை, கருப்பறியலூர்
கூற்றானை, கூற்று உதைத்துக் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில்
ஏற்றானை, மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .

3

முட்டாமே நாள்தோறும் நீர் மூழ்கி, பூப் பறித்து, மூன்று போதும்
கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு, அடிச் சேர்த்தும் அந்தணர் தம் கருப்பறியலூர்
கொட்டு ஆட்டுப் பாட்டு ஆகி நின்றானை, குழகனை,கொகுடிக் கோயில்
எட்டு ஆன மூர்த்தியை, நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .

4

விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி, வினை போக, வேலிதோறும்
கருந் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர்
குருந்து ஆய முள் எயிற்றுக் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .

5

பொடி ஏறு திருமேனிப் பெருமானை, பொங்கு அரவக் கச்சையானை,
கடி நாறும் பூம் பொய்கைக் கயல் வாளை குதி கொள்ளும் கருப்பறியலூர்
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண் செய்யும் கொகுடிக் கோயில்
அடி ஏறு கழலானை, நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .

6

பொய்யாத வாய்மையால், பொடி பூசிப் போற்று இசைத்து, பூசை செய்து,
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர் தம் கருப்பறியலூர்
கொய் உலாம் மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக் கோயில்
ஐயனை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .

7

செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழியச் சிந்தை செய்மின்!
கடி கொள் பூந் தடம் மண்டிக் கருமேதி கண் படுக்கும் கருப்பறியலூர்
கொடி கொள் பூ நுண் இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில்
அடிகளை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .

8

பறையாத வல்வினைகள் பறைந்தொழிய, பல்-நாளும் பாடி ஆடி
கறை ஆர்ந்த கண்டத்தன், எண்தோளன், முக்கண்ணன், கருப்பறியலூர்,
குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத, கொகுடிக் கோயில்
உறைவானை, மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே! .

9

சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணாக்
கங்கு ஆர்ந்த வார்சடைகள் உடையானை, விடையானை, கருப்பறியலூர்
கொங்கு ஆர்ந்த பொழில்-சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக் கோயில்
எம் கோனை, மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .

10

பண் தாழ் இன் இசை முரலப் பல்-நாளும் பாவித்துப் பாடி ஆடிக்
கண்டார் தம் கண் குளிரும் களிக் கமுகம் பூஞ்சோலைக் கருப்பறியலூர்
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம் கூறும் கொகுடிக் கோயில்
எண் தோள் எம்பெருமானை நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .

11

கலை மலிந்த தென்புலவர் கற்றோர் தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர்
குலை மலிந்த கோள்-தெங்கு மட்டு ஒழுகும் பூஞ்சோலை கொகுடிக் கோயில்
இலை மலிந்த மழுவானை, மனத்தினால் அன்பு செய்து, இன்பம் எய்தி,
மலை மலிந்த தோள் ஊரன்-வனப் பகை அப்பன்-உரைத்த வண் தமிழ்களே! .