பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஆறாம் தந்திரம் / சிவவேடம்
வ.எண் பாடல்
1

அருளால் அரனுக்கு அடிமை அது ஆகிப்
பொருள் ஆம் தனது உடல் பொன் பதி நாடி
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர்
தெருள் ஆம் அடிமைச் சிவ வேடத்தோரே.

2

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.

3

மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று
கயல் உற்ற கண்ணியர் கை இணக்கு அற்றுத்
தயல் அற்றவரோடும் தாமே தாம் ஆகிச்
செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே.

4

ஓடும் குதிரைக் குசை திண்ணம் பற்றுமின்
வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம் பெருமான் தன்னைத்
தேடும் இன்பப் பொருள் சென்று எய்தலாமே.