பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நாலும் இருமூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும் கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும் மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் காலம் கண்டான் அடி காணலும் ஆமே.
ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம் அந்தத்தின் மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி போத அலயத்த விகாரம் தனில் போத மேதாதி ஆதாரம் ஈது ஆன உண்மையே.
மேல் என்றும் கீழ் என்று இரண்டு அறக் காணுங்கால் தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும் பார் எங்கும் ஆகிப் பரந்த பராபரம் கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே.
மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி ஆதார சோதனை அத்துவ சோதனை தாதாரம் ஆகவே தான் எழச் சாதித்தால் ஆதாரம் செய் போகம் ஆவது காயமே.
ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில் கூறிய ஆதாரம் மற்றும் குறிக் கொண்மின் ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே.
ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்திய வாறுதான் ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே.
ஆயு மலரின் அணிமலர் மேல் அது ஆய இதழும் பதினாறும் அங்கு உள தூய அறிவு சிவானந்தம் ஆகிப் போய் மேய அறிவாய் விளைந்தது தானே.