பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
விச்சுக் கலம் உண்டு வேலிச் செய் ஒன்று உண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சம் கெட்டு அச் செய் அறுத்து உண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.
பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை தன்னில் பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்யப் பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டிப் பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே.
பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தரம் ஆக நினையும் அடியார் இரந்து உண்டு தன்கழல் எட்டச் செய்தானே.
வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன் தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம் பொர இருந்தான் புகலே புகல் ஆக வர இருந்தால் அறியான் என்பது ஆமே.
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவன் அடியார் சரீரத்து இடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் தங்கார் சிவனைத் தலைப் படு வாரே.
மெய் அக ஞானம் மிகத்ம் தெளிந்தார்களும் கை அக நீண்டார் கடைத் தலைக்கே செல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியார் வையகம் எல்லாம் வர இருந்தாரே.