பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

பாயிரம் / மும் மூர்த்திகளின் முறைமை
வ.எண் பாடல்
1

அளவு இல் இளமையும் அந்தமும் ஈறும்
அளவு இயல் காலமும் நாலும் உணரில்
தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல்
அளவு இல் பெருமை அரி அயற்கு ஆமே.

2

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர் மிசையானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்
பேதித்து உலகம் பிணங்கு கின்றார்களே.

3

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார்
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார் களே.

4

சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறு இரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும்
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே.

5

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம்
வயனம் பெறுவீர் அவ் வானவராலே.

6

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்பு நீ
ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே.

7

வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேன் அமர் கொன்றைச் சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஓரும் தனித் தெய்வம் மற்று இல்லை
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே.

8

சோதித்த பேர் ஒளி மூன்று ஐந்து என நின்ற
ஆதிக் கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித்து அவரைப் பிதற்றுகின்றாரே.

9

பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறம் ஆகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகித்
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே.

10

தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை
வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான்
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற
தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே.