பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

பாயிரம் / ஆகமச் சிறப்பு
வ.எண் பாடல்
1

அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே.

2

அண்ணல் அருளால் அருளும் சிவா ஆகமம்
எண்ணில் இருபத்து எண் கோடி நூறு ஆயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்ற அப் பொருள் ஏத்துவன் யானே.

3

அண்ணல் அருளால் அருளும் திவ்யா கமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்க அரிது
எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

4

பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில்
அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே.

5

சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.

6

பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்
உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்
மற்று அவ் வியாமளம் ஆகும்கால் ஓத்தரந்து
உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே.

7

ஆகமம் ஒன்பான் அதில் ஆன நால் ஏழு
மேகம் இல் நால் ஏழு முப்பேதம் உற்று உடன்
வேகம் இல் வேதாந்த சித்தாந்த மெய்ம்மை ஒன்று
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே.