பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வசை இல் விழுப் பொருள் வானும் நிலனும் திசையும் திசை பெறு தேவர் குழாமும் விசையம் பெருகிய வேத முதல் ஆம் அசை இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போ கதி நாடிப் புறம் கொடுத்து உண்ணுவர் தாம் விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி தாம் அறிவாலே தலைப் பட்ட வாறே.
அணை துணை அந்தணர் அங்கியுள் அங்கி அணை துணை வைத்து அதன் உள் பொருள் ஆன இணை துணை யாமத்து இயங்கும் பொழுது துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே.
தானே விடும் பற்று இரண்டும் தரித்திட யானே விடப் படும் ஏது ஒன்றை நாடாது பூ மேவு நான் முகன் புண்ணிய போகனாய் ஓ மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே.
நெய் நின்று எரியும் நெடும் சுடரே சென்று மை நின்று எரியும் வகை அறிவார் கட்கு மை நின்று அவிழ் தருமத்தின் ஆம் என்றும் செய் நின்ற செல்வம் தீ யதுவாமே.
பாழி அகலும் எரியும் திரிபோல் இட்டு ஊழி அகலும் உறுவினை நோய் பல வாழி செய்து அங்கி உதிக்க அவை விழும் வீழி செய்து அங்கி வினை சுடும் ஆமே.
பெரும் செல்வம் கேடு என்று முன்னே படைத்த வரும் செல்வம் தந்த தலைவனை நாடும் வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே.
ஒண் சுடரானை உலப்பு இலி நாதனை ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அத் தண் சுடர் ஓமத் தலைவனும் ஆமே.
ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக் கடல் கோமத்துள் அங்கி குரை கடல் தானே.
அங்கி நிறுத்தும் அரும் தவர் ஆரத்து அங்கி இருக்கும் வகை அருள் செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே.