பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.
பொன்னைக் கடந்து இலங்கும் புலித் தோலினன் மின்னிக் கிடந்து மிளிரும் இளம் பிறை துன்னிக் கிடந்த சுடு பொடி ஆடிக்குப் பின்னிக் கிடந்தது என் பேர் அன்பு தானே.
என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டுப் பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும் அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி என் போல் மணியினை எய்த ஒண்ணாதே.
ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணை அடி பாரம் உடையவர் காண்பார் பவம் தன்னைக் கோர நெறிகொடு கொங்கு புக்காரே.
என் அன்பு உருக்கி இறைவனை ஏத்துமின் முன் அன்பு உருக்கி முதல்வனை நாடுமின் பின் அன்பு உருக்கி பெரும் தகை நந்தியும் தன் அன்பு எனக்கே தலை நின்ற வாறே.
தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும் வான் ஒரு காலம் வழித்துணை ஆய் நிற்கும் தேன் ஒரு பால் திகழ் கொன்றை அணி சிவன் தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே.
முன் படைத்து இன்பம் படைத்த முதல் இடை அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார் வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில் அன்பு அடைத்தான் தன் அகல் இடத் தானே.
கருத்து உறு செம் பொன் செய் காய் கதிர்ச் சோதி இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில் விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள் இச்சை உளே வைப்பர் எந்தைபிரான் என்று நச்சியே அண்ணலை நாடு கிலாரே.
அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான் முன் பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன் அன்பின் உள் ஆகி அமரும் அரும் பொருள் அன்பின் உள்ளார்க்கே அணை துணை ஆமே.