பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / பதிவலியில் வீரட்டம் எட்டு
வ.எண் பாடல்
1

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்டக்
குருத்து உயர் சூலம் கைக் கொண்டு கொன்றானே.

2

கொலையில் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கி இட்டு
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித்
தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே.

3

எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும்
தங்கும் படித் தவன் தாள் உணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற
அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே.

4

எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே.

5

அப்பணி செம்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும் மலக் காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரே.

6

முத் தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதிய தாம் பல தேவரும்
அத்தீயின் உள் எழுந்தன்று கொலையே.

7

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேல் உற நோக்கி முன்
கால் உற்றுக் காலனைக் காய்ந்து அங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

8

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயல் அழித்து அம்கண்
அரும்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே.