பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / சக்கரப் பேறு
வ.எண் பாடல்
1

மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம்
கால் போதம் கையினோடு அந்தரச் சக்கரம்
மேல் போக வெள்ளி மலை அமரர்பதி
பார் போகம் ஏழும் படைத்து உடையானே.

2

சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்க நல் சத்தியைத் தான் கூறு செய்ததே

3

கூறதுவாகக் குறித்து நல் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

4

தக்கன் தன் வேள்வி தகர்த்த நல் வீரர்பால்
தக்கன் தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைச் சசி முடிமேல் விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.