பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினை கெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனம் உடைக் கல்வி இலோரே.
தளி அறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும் குளி அறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான் வளி அறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே.
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினைப் பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே.
அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச் செறிவான் உறை பதம் சென்று வலம் கொள் மறியார் வளைக் கை வருபுனல் கங்கைப் பொறியார் புனல் மூழ்கப் புண்ணியர் ஆமே.
கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல் உடல் உற்றுத் தேடுவார் தம்மை ஒப்பார் இலர் திடம் உற்ற நந்தி திரு அருளால் சென்று உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே.
கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும் கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும் கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும் கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே.