பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு நிலை கெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே.
கட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில் வெட்டு விக்கும் அபிடேகத்து அரசரை முட்டு விக்கும் முனி வேதியர் ஆயினும் வெட்டு வித்தே விடும் விண்ணவன் ஆணையே.
ஆற்ற அரு நோய் மிக்கு அவனி மழை இன்றிப் போற்ற அரு மன்னரும் போர் வலி குன்றுவர் கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்கு உள வாரி வளம் குன்றும் கன்னம் களவு மிகுந்திடும் காசினி என் அரு நந்தி எடுத்து உரைத்தானே.
பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம் பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே.