பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / சிவநிந்தை
வ.எண் பாடல்
1

தெளி உறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளி உறுவார் அமரா பதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழில்
கிளி ஒன்று பூஞையில் கீழ் அது ஆகுமே.

2

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே.

3

அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நல் பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகைஆகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே.

4

போகமும் மாதர் புலவி அது நினைந்து
ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால்
வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே.