பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐந்தாம் தந்திரம் / சரியை
வ.எண் பாடல்
1

உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை
உயிர் பெறு ஆவாகனம் புறப் பூசை
செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே.

2

நாடு நகரமும் நல் திருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.

3

பத்தர் சரிதை படுவோர் கிரியை ஓர்
அத்தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்தவியம் ஆதி சாதகர் தூ யோகர்
சித்தர் சிவஞானம் சென்று எய்து வோர் களே.

4

சார்ந்த மெய்ஞ் ஞானத்தோர் தான் அவன் ஆயினோர்
சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியை யோர் நீள் நிலத்தோரே.

5

கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை
அரிய சிவன் உரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை ஆமே.

6

சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும்
விரிவு ஆன வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருள் ஆனது நந்தி பொன் நகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே.

7

சமையம் பல சுத்தித் தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே.