பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐந்தாம் தந்திரம் / கிரியை
வ.எண் பாடல்
1

பத்துத் திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு
எத்திக் கிலர் இல்லை என்பதின் அமலர்க்கு
ஒத்துத் திருவடி நீழல் சரண் எனத்
தத்தும் வினைக் கடல் சாராது காணுமே.

2

கான் உறு கோடி கடி கமழ் சந்தனம்
வான் உறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூங் கழல் சேர ஒண்ணாதே.

3

கோனக் கன்று ஆயே குரைகழல் ஏத்து மின்
ஞானக் கன்று ஆகிய நடுவே உழிதரும்
வானக் கன்று ஆகிய வானவர் கைதொழு
மானக் கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே.

4

இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம்
அது பணி செய்கின்றவள் ஒரு கூறன்
இது பணி மானுடர் செய் பணி ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே.

5

பத்தன் கிரியை சரியை பயில் உற்றுச்
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர் கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே.

6

அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன்
செம் பொன் செய் மேனி கமலத் திருவடி
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள்
என்பின் உள் சோதி இலங்கு கின்றானே.