பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நம்பியாண்டார் நம்பிகள் /ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
வ.எண் பாடல்
1

பாலித் தெழில்தங்குபாரகம் உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை யன்னம் நடப்ப, வணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே.

2

கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி
பங்குதங் கும்மங்கை தன்னருள் பெற்றவன், பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர் த புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே.

3

குவளைக் கருங்கண் கொடியிடை துன்பந் தவிரவன்று
துவளத் தொடுவிடந் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன்
திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்வாய்த்
தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே.

4

கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கட மாக்கியஃதே
வெள்ளம் பணிநெய்த லாக்கிய வித்தகன், வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ டாலக் கயலுகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.

5

ஆறதே றுஞ்சடை யானருள் மேவ வவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன், மென்கிளிமாந்
தேறல்கோ தித்துறு சண்பகந் தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.

6

அந்தமுந் தும்பிற வித்துயர் தீர வரனடிக்கே
பந்தமுந் துந்தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங் கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.

7

புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புதவடைக்கும்
ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா சனியும்பர் பம்பிமின்னுங்
கொண்டலைக் கண்டுவண் டாடப் பெடையொடுங் கொக்குறங்குந்
தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே.

8

எண்டலைக் குந்தலை வன்கழல் சூடியெ னுள்ளம்வெள்ளங்
கண்டலைப் பத்தன் கழல்தந்த வன்கதிர் முத்தநத்தம்
விண்டலைப் பத்தியி லோடும் விரவி மிளிர்பவளம்
தண்டலைக் குங்கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே.

9

ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி யமண்முழுதும்
பாறுமண் டக்கண்ட சைவ சிகாமணி பைந்தடத்த
சேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச்
சாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே.

10

விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின்
வடந்திளைக் குங்கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக்
கடந்திளைத் துக்கழு நீர்புல்கி யொல்கிக் கரும்புரிஞ்சித்
தடந்திளைக் கும்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.

11

பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து
வாலிப்ப வாறதே றுங்கழ னிச்சண்பை யந்தமுந்து
மேலிட்ட புண்டலைக் குஞ்சரத் எண்டலைக் குந்தலைவன்
கோலிட்ட வாறு விடந்திளைக் கும்அர வல்குலையே.