பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் பார் வளர் புகழின் மிக்க பழம்பதி; மதி தோய் நெற்றிக் கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்பது ஆகும்.
அந் நகர் அதனில் வாழ்வார்; அறுவையர் குலத்து வந்தார்; மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்; பன்னக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம் சென்னியால் கொண்டு போற்றும் தேசினார்; நேசர் என்பார்.
ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கி ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கி, தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப் பாங்கு உடை உடையும் கீளும் பழுதுஇல் கோவணமும் நெய்வார்.
உடையொடு நல்ல கீளும் ஒப்பு இல் கோவணமும் நெய்து, விடையவர் அடியார் வந்து வேண்டு மாறு ஈயும் ஆற்றால் இடை அறாது அளித்து, நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி, அடைவு உறு நலத்தர் ஆகி, அரன் அடி நீழல் சேர்ந்தார்.
கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினை செற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட கொற்ற வேந்தர் கோச்செங் கண் சோழர் பெருமை கூறுவாம்.