பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சுடர் பொன் குன்றை, தோளா முத்தை, வாளா தொழும்பு உகந்து கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை, கரு மால், பிரமன், தடை பட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆர் அமுதை, புடை பட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
ஆற்றகில்லேன் அடியேன்; அரசே! அவனி தலத்து ஐம் புலன் ஆய சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து, சிவன், எம்பெருமான், என்று ஏத்தி, ஊற்று மணல் போல், நெக்கு நெக்கு உள்ளே உருகி, ஓலம் இட்டு, போற்றிப் புகழ்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
நீண்ட மாலும், அயனும், வெருவ நீண்ட நெருப்பை, விருப்பிலேனை ஆண்டு கொண்ட என் ஆர் அமுதை, அள்ளூறு உள்ளத்து அடியார் முன் வேண்டும்தனையும் வாய் விட்டு அலறி, விரை ஆர் மலர் தூவி, பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
அல்லிக் கமலத்து அயனும், மாலும், அல்லாதவரும், அமரர் கோனும், சொல்லிப் பரவும் நாமத்தானை, சொல்லும் பொருளும் இறந்த சுடரை, நெல்லிக் கனியை, தேனை, பாலை, நிறை இன் அமுதை, அமுதின் சுவையை, புல்லிப் புணர்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான், கீழ் மேல், அயனும் மாலும், அகழப் பறந்தும், காணமாட்டா அம்மான், இம் மா நிலம் முழுதும் நிகழப் பணி கொண்டு, என்னை ஆட்கொண்டு, ஆ! ஆ! என்ற நீர்மை எல்லாம் புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
பரிந்து வந்து, பரம ஆனந்தம், பண்டே, அடியேற்கு அருள்செய்ய, பிரிந்து போந்து, பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன், என்று என்று, சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர், உரோமம் சிலிர்ப்ப, உகந்து அன்பு ஆய், புரிந்து நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
நினையப் பிறருக்கு அரிய நெருப்பை, நீரை, காலை, நிலனை, விசும்பை, தனை ஒப்பாரை இல்லாத் தனியை, நோக்கி; தழைத்து; தழுத்த கண்டம் கனைய; கண்ணீர் அருவி பாய; கையும் கூப்பி, கடி மலரால் புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
நெக்கு நெக்கு, உள் உருகி உருகி, நின்றும், இருந்தும், கிடந்தும், எழுந்தும், நக்கும், அழுதும், தொழுதும், வாழ்த்தி; நானா விதத்தால் கூத்து நவிற்றி; செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி; சிலிர் சிலிர்த்து; புக்கு நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
தாதாய், மூ ஏழ் உலகுக்கும் தாயே, நாயேன் தனை ஆண்ட பேதாய், பிறவிப் பிணிக்கு ஓர் மருந்தே, பெரும் தேன் பில்க, எப்போதும் ஏது ஆம் மணியே! என்று என்று ஏத்தி, இரவும் பகலும், எழில் ஆர் பாதப் போது ஆய்ந்து, அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
காப்பாய், படைப்பாய், கரப்பாய், முழுதும்; கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் மூப்பாய்; மூவா முதலாய் நின்ற முதல்வா; முன்னே எனை ஆண்ட பார்ப்பானே; எம் பரமா! என்று, பாடிப் பாடிப் பணிந்து, பாதப் பூப் போது அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?