பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பரு வரை மங்கை தன் பங்கரை, பாண்டியற்கு ஆர் அமுது ஆம் ஒருவரை, ஒன்றும் இலாதவரை, கழல் போது இறைஞ்சி, தெரிவர நின்று, உருக்கி, பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை அன்றி, உருவு அறியாது என் தன் உள்ளம் அதே.
சதிரை மறந்து, அறி மால் கொள்வர் சார்ந்தவர்; சாற்றிச் சொன்னோம்; கதிரை மறைத்தன்ன சோதி, கழுக்கடை கைப் பிடித்து, குதிரையின் மேல் வந்து கூடிடுமேல், குடி கேடு கண்டீர்! மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே.
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்; பார் இன்ப வெள்ளம் கொள, பரி மேற்கொண்ட பாண்டியனார், ஓர் இன்ப வெள்ளத்து உருக் கொண்டு, தொண்டரை உள்ளம் கொண்டார்; பேர் இன்ப வெள்ளத்துள், பெய் கழலே சென்று பேணுமினே.
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின்; தென்னன், நல் நாட்டு இறைவன், கிளர்கின்ற காலம் இக் காலம், எக் காலத்துள்ளும்; அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து, ஆனந்த மாக் கடவி, எறியும் பிறப்பை, எதிர்ந்தார் புரள, இரு நிலத்தே.
காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய ஆலம் உண்டான்; எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான்: வந்து, முந்துமினே.
ஈண்டிய மாய இருள் கெட, எப் பொருளும் விளங்க, தூண்டிய சோதியை, மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்; வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல்; விரும்புமின் தாள்; பாண்டியனார் அருள்செய்கின்ற முத்திப் பரிசு இதுவே.
மாய வனப் பரி மேற்கொண்டு, மற்று அவர் கைக்கொளலும், போய் அறும், இப் பிறப்பு என்னும் பகைகள்: புகுந்தவருக்கு, ஆய, அரும் பெரும், சீர் உடைத் தன் அருளே அருளும்: சேய நெடும் கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே.
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த வெள்ளத்திடை அழுத்தி, கழிவு இல் கருணையைக் காட்டி, கடிய வினை அகற்றி, பழ மலம் பற்று அறுத்து, ஆண்டவன், பாண்டிப் பெரும் பதமே, முழுது உலகும், தருவான், கொடையே; சென்று முந்துமினே.
விரவிய தீ வினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்க, பரவிய அன்பரை, என்பு உருக்கும் பரம் பாண்டியனார், புரவியின் மேல் வர, புந்தி கொளப்பட்ட பூம் கொடியார் மர இயல் மேற்கொண்டு, தம்மையும் தாம் அறியார், மறந்தே.
கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து, அழகால் வீற்றிருந்தான், பெரும் தேவியும், தானும் ஒர் மீனவன்பால் ஏற்று வந்து, ஆர் உயிர் உண்ட, திறல் ஒற்றைச் சேவகனே; தேற்றம் இலாதவர்! சேவடி சிக்கெனச் சேர்மின்களே.