பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை, பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம், சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
நெறி அல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனை, சிறு நெறிகள் சேராமே, திருஅருளே சேரும்வண்ணம், குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும்வண்ணம் அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
பொய் எல்லாம் மெய் என்று, புணர் முலையார் போகத்தே மையல் உறக் கடவேனை, மாளாமே, காத்தருளி, தையல் இடம் கொண்ட பிரான், தன் கழலே சேரும்வண்ணம், ஐயன், எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
மண் அதனில் பிறந்து, எய்த்து, மாண்டு விழக் கடவேனை, எண்ணம் இலா அன்பு அருளி, எனை ஆண்டிட்டு, என்னையும் தன் சுண்ண வெண் நீறு அணிவித்து, தூ நெறியே சேரும்வண்ணம், அண்ணல் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு, நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்; உய்ஞ்சேன் நான்; உடையானே, அடியேனை வருக என்று, அஞ்சேல் என்று, அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று, வினை பெருக்கி, கொந்து குழல் கோல் வளையார் குவி முலைமேல் விழுவேனை, பந்தம் அறுத்து, எனை ஆண்டு, பரிசு அற, என் துரிசும் அறுத்து, அந்தம் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
தையலார் மையலிலே தாழ்ந்து விழக் கடவேனை, பையவே கொடு போந்து, பாசம் எனும் தாழ் உருவி, உய்யும் நெறி காட்டுவித்திட்டு, ஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
சாதல், பிறப்பு, என்னும் தடம் சுழியில் தடுமாறி, காதலின் மிக்கு, அணி இழையார் கலவியிலே விழுவேனை, மாது ஒரு கூறு உடைய பிரான், தன் கழலே சேரும்வண்ணம், ஆதி, எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை, மும்மை மலம் அறுவித்து, முதல் ஆய முதல்வன் தான் நம்மையும் ஓர் பொருள் ஆக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!