பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும்
வ.எண் பாடல்
1

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,
மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி
அதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

2

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த,
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த!
சொல்லாய்
செய் தவ நால் மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி
அதனுள்
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

3

தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர், தொகும் மறையோர்கள்,
வளர்த்த செந்தீ
மால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த!
சொல்லாய்
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள்
செங்காட்டங்குடி அதனுள்
கால் புல்கு பைங் கழல் ஆர்க்க ஆடும் கணபதி யீச்சுரம் காமுறவே?

4

நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால் மறையோர் வழிபாடு
செய்ய,
மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த!
சொல்லாய்
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி
அதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

5

பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ,
மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த!
சொல்லாய்
சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி
அதனுள்
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

6

புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்தொறும்
போற்றி இசைப்ப,
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த!
சொல்லாய்
சினை கெழு தண் வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள்
செங்காட்டங்குடி அதனுள்
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

7

பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடுந்தோள்
வரையால் அடர்த்து,
மாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த!
சொல்லாய்
சேண் தங்கு மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி
அதனுள்
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம்
காமுறவே?

8

அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும், அறிவு அரிய,
மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே?

9

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத்
தின்னும்
நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர் அல்லார் தொழும் மா
மருகல்,
மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி
அதனுள்
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம்
காமுறவே?

10

நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும்
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல்
மொழிந்த,
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி
அதனுள்
சூலம் வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை
இல்லை ஆமே.