பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன் சிறியனுக் கினியது காட்டிப் பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின் பெருமையிற் பெரியதொன் றுளதே ? மருதர சிருங்கோங் ககில்மரம் சாடி வரைவளங் கவர்ந்திழி வையைப் பொருதிரை மருங்கோங் காவண வீதிப் பூவணம் கோயில் கொண்டாயே.
பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர் பன்னெடுங் காலம்நிற் காண்பான் ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன் தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத் தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும் பூம்பணைச்சோலை ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற் கையினிற் கட்டிய கயிற்றால் இருதலை ஒருநா இயங்கவந் தொருநாள் இருந்திடாய் எங்கள்கண் முகப்பே விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த புரிசடை துகுக்கும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
கண்ணியல் மணியின் சூழல்புக் கங்கே கலந்துபுக் கொடுங்கினேற் கங்ஙன் நுண்ணியை யெனினும், நம்ப ! நின் பெருமை நுண்ணிமை யிறந்தமை அறிவன் மண்ணியல் மரபின் தங்கிருள் மொழுப்பின் வண்டினம் பாடநின் றாடும் புண்ணிய மகளிர் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர் கள்ளரை மெள்ளவே துரந்துன் அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய் ; நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க நிலைவிளக் கலகில்சா லேகப் புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன் சேவடி பார்த்திருந் தலச எம்மனம் குடிகொண் டிருப்பதற் கியான்ஆர் ? என்னுடை அடிமைதான் யாதே ? அம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள அரிவையர் அவிழ்குழற் சுரும்பு பொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
சொன்னவில் முறைநான் காரணம் உணராச் சூழல்புக் கொளித்தநீ யின்று கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக் கருணையிற் பெரியதொன் றுளதே ? மின்னவில் கனக மாளிகை வாய்தல் விளங்கிளம் பிறைதவழ் மாடம் பொன்னவில் புரிசை ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட புனிதனை, வனிதை பாகனை, வெண் கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும் குழகனை, அழகெலாம் நிறைந்த தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந் திகழ்கரு வூரனேன் உரைத்த பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள் பரமன துருவமா குவரே.