செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன்
சேவடி பார்த்திருந் தலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற் கியான்ஆர் ?
என்னுடை அடிமைதான் யாதே ?
அம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
அரிவையர் அவிழ்குழற் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.