பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்; அடியார் புகல, மகிழும் பெருமான் குடவாயில் மன்னி நிகழும் பெருங்கோயில் நிலாயவனே.
ஓடும் நதியும், மதியோடு, உரகம், சூடும் சடையன்; விடை தொல்கொடிமேல் கூடும் குழகன் குடவாயில்தனில் நீடும் பெருங்கோயில் நிலாயவனே.
கலையான்; மறையான்; கனல் ஏந்து கையான்; மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்; கொலை ஆர் சிலையான் குடவாயில்தனில் நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.
சுலவும் சடையான்; சுடுகாடு இடமா, நல மென்முலையாள் நகைசெய்ய, நடம் குலவும் குழகன் குடவாயில் தனில் நிலவும் பெருங்கோயில் நிலாயவனே.
என்தன் உளம் மேவி இருந்த பிரான்; கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக் குன்றன்; குழகன் குடவாயில்தனில் நின்ற பெருங்கோயில் நிலாயவனே.
அலை சேர் புனலன்; அனலன்; அமலன்; தலை சேர் பலியன்; சதுரன்; விதிரும் கொலை சேர் படையன் குடவாயில்தனில் நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே.
அறை ஆர் கழலன்; அழலன்; இயலின் பறை யாழ் முழவும் மறை பாட, நடம் குறையா அழகன் குடவாயில்தனில் நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.
வரை ஆர் திரள்தோள் அரக்கன் மடிய(வ்) வரை ஆர் ஒர்கால்விரல் வைத்த பிரான் வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.
பொன் ஒப்பவனும், புயல் ஒப்பவனும், தன் ஒப்பு அறியாத் தழல் ஆய் நிமிர்ந்தான்; கொல் நல் படையான் குடவாயில்தனில் மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.
வெயிலின் நிலையார், விரி போர்வையினார், பயிலும் உரையே பகர் பாவிகள்பால் குயிலன்; குழகன் குடவாயில்தனில் உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே.
கடுவாய் மலி நீர் குடவாயில்தனில் நெடு மா பெருங்கோயில் நிலாயவனை, தடம் ஆர் புகலித் தமிழ் ஆர் விரகன், வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே.
கலை வாழும் அம் கையீர்! கொங்கை ஆரும் கருங்கூந்தல் அலை வாழும் செஞ்சடையில், அரவும் பிறையும் அமர்வித்தீர்! குலைவாழை கமுகம் பொன்பவளம் பழுக்கும் குடவாயில், நிலை வாழும் கோயிலே கோயில் ஆக நின்றீரே.
அடி ஆர்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப, அங்கையில் செடி ஆர்ந்த வெண்தலை ஒன்று ஏந்தி, உலகம் பலி தேர்வீர்! குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில், படி ஆர்ந்த கோயிலே கோயில் ஆகப் பயின்றீரே.
கழல் ஆர் பூம்பாதத்தீர்! ஓதக்கடலில் விடம் உண்டு, அன்று, அழல் ஆரும் கண்டத்தீர்! அண்டர் போற்றும் அளவினீர்! குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில், நிழல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.
மறி ஆரும் கைத்தலத்தீர்! மங்கை பாகம் ஆகச் சேர்ந்து எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர்! குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில், நெறி ஆரும் கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக, பிழையாத சூலம் பெய்து, ஆடல் பாடல் பேணினீர்! குழை ஆரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில், விழவு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மிக்கீரே.
அரவு ஆர்ந்த திருமேனி ஆன வெண் நீறு ஆடினீர்! இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர்! குரவு ஆர்ந்த பூஞ்சோலை வாசம் வீசும் குடவாயில் திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகத் திகழ்ந்தீரே.
பாடல் ஆர் வாய்மொழியீர்! பைங்கண் வெள் ஏறு ஊர்தியீர்! ஆடல் ஆர் மா நடத்தீர்! அரிவை போற்றும் ஆற்றலீர்! கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில், நீடல் ஆர் கோயிலே கோயில் ஆகப் நிகழ்ந்தீரே.
கொங்கு ஆர்ந்த பைங்கமலத்து அயனும், குறள் ஆய் நிமிர்ந்தானும், அங்காந்து தள்ளாட, அழல் ஆய் நிமிர்ந்தீர்! இலங்கைக் கோன் தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர்! குடவாயில், பங்கு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகப் பரிந்தீரே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை
தூசு ஆர்ந்த சாக்கியரும், தூய்மை இல்லாச் சமணரும், ஏசு ஆர்ந்த புன்மொழி நீத்து, எழில் கொள் மாடக் குடவாயில், ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற, தேசு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.
நளிர் பூந் திரை மல்கு காழி ஞானசம்பந்தன், குளிர் பூங் குடவாயில் கோயில் மேய கோமானை, ஒளிர்பூந்தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார், தளர்வு ஆனதாம் ஒழிய, தகு சீர் வானத்து இருப்பாரே.