பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருள மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த திறத்தால், தெரிவு எய்திய தீ, வெண்திங்கள், நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
பதிதான் இடுகாடு; பைங்கொன்றை தொங்கல்; மதிதான் அது சூடிய மைந்தனும் தான்; விதி தான்; வினை தான்; விழுப்பம் பயக்கும் நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
நலம்தான் அவன்; நான்முகன்தன் தலையைக் கலம்தான் அது கொண்ட கபாலியும் தான்; புலம் தான்; புகழால் எரி விண் புகழும் நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
தலைதானது ஏந்திய தம் அடிகள் கலைதான் திரி காடுஇடம் நாடுஇடம் ஆம்; மலைதான் எடுத்தான், மதில்மூன்று உடைய; நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
தவம் தான்; கதி தான்; மதி வார்சடைமேல் உவந்தான்; சுறவேந்தன் உரு அழியச் சிவந்தான்; செயச்செய்து செறுத்து உலகில் நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
வெறி ஆர் மலர்க்கொன்றைஅம்தார் விரும்பி; மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்; குறியால் குறி கொண்டவர் போய்க் குறுகும் நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்; இறை தான்; இறவாக் கயிலைமலையான்; மறை தான்; புனல், ஒண்மதி, மல்கு சென்னி நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
மறைத்தான், பிணி மாது ஒருபாகம்தன்னை; மிறைத்தான், வரையால், அரக்கன் மிகையைக் குறைத்தான், சடைமேல் குளிர் கோல்வளையை நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
தழல் தாமரையான், வையம் தாயவனும், கழல்தான் முடி காணிய, நாண் ஒளிரும் அழல்தான்; அடியார்க்கு அருள் ஆய்ப் பயக்கும் நிழல்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை, "என் அத்தா!" என, வாங்கி அது உண்ட கண்டன்; மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின் நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை, நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன, பகர்வார் அவர் பாவம் இலாதவரே.