பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கடம்பூர்
வ.எண் பாடல்
1

வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.

2

அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை
அதளும்,
விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி,
விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று
அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே.

3

இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து
ஏற,
தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி,
புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,
நாமே.

4

பறையொடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம்
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர்
கடம்பூரில்
மறையொலி கூடிய பாடல் மருவி நின்று, ஆடல் மகிழும்
பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார்
பெரியோரே.

5

தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு, இடுகாட்டில்,
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம்
நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில்,
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

6

தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப்
பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.

7

பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத,
கலி கெழு வீதி கலந்த, கார் வயல் சூழ் கடம்பூரில்,
ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண் நுதலாள் உமை
கேள்வன்,
புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல்
பொருள்

8

பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்,
"மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்!" என வாழ்த்தி,
தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே.

9

திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும்,
இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே.

10

ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்
ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல்
அலகண்டீர்!
வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே.

11

விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.