பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருநல்லூர்
வ.எண் பாடல்
1

பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு சடை தாழப்
பண் அமரும் நால்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்!
திண் அமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திரு
நல்லூர்,
மண் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

2

அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி, அங்கையில்
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும்
கொள்கையீர்!
சிலை மல்கு வெங்கணையால் புரம் மூன்றும் எரித்தீர்! திரு
நல்லூர்,
மலை மல்கு கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

3

குறை நிரம்பா வெண்மதியம் சூடிக் குளிர்புன்சடை தாழ,
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணிப் பயில்கின்றீர்!
சிறை நவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்,
மறை நவின்ற கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

4

கூன் அமரும் வெண்பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்!
மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு
நல்லூர்,
வான் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

5

நிணம் கவரும் மூவிலையும் அனலும் ஏந்தி, நெறிகுழலாள
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்!
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி, திரு நல்லூர்,
மணம் கமழும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

6

கார் மருவு பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை தாழ,
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேர் மருவு நெடுவீத்க் கொடிகள் ஆடும் திரு நல்லூர்,
ஏர் மருவு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

7

ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி, உமை காண,
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்!
தேன் தோயும் பைம்பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்,
வான் தோயும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

8

காது அமரும் வெண்குழையீர்! கறுத்த அரக்கன் மலை
எடுப்ப,
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு
உகந்தீர்!
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர்,
மாது அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

9

போதின் மேல் அயன், திருமால், போற்றி உம்மைக்
காணாது
"நாதனே இவன்" என்று நயந்து ஏத்த, மகிழ்ந்து அளித்தீர்!
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர்,
மாதராள் அவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே.

10

பொல்லாத சமணரொடு புறம் கூறும் சாக்கியர் ஒன்று
அல்லாதார் அற உரை விட்டு, அடியார்கள் போற்று ஓவா
நல்லார்கள், அந்தணர்கள், நாளும் ஏத்தும் திரு நல்லூர்,
மல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

11

கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு
&குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு
நல்லூர்,
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்தன்னைப் பயில் பாடல்
சிந்தனையால் உரை செய்வார், சிவலோகம் சேர்ந்து இருப்பாரே.