பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார் அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர் சந்தமால், அவர் மேவிய சந்தமே.
வான் இலங்க விளங்கும் இளம்பிறை- தான் அலங்கல் உகந்த தலைவனார் கான் இலங்க வரும் கழிப்பாலையார் மான் நலம் மடநோக்கு உடையாளொடே.
கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர் பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்; கடி கொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே?
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் தண் அலங்கல் உகந்த தலைவனார் கண் நலம் கவரும் கழிப்பாலையுள அண்ணல்; எம் கடவுள்(ள்) அவன் அல்லனே?
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும் பாரினார் உடனே பரவப்படும், காரின் ஆர் பொழில் சூழ், கழிப்பாலை எம் சீரினார் கழலே சிந்தை செய்(ம்)மினே!
துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர் கொள்வனார், இடு வெண்தலையில் பலி; கள்வனார்; உறையும் கழிப்பாலையை உள்ளுவார் வினை ஆயின ஓயுமே.
மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும், எண்ணி, நீர் இனிது ஏத்துமின்-பாகமும் பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக் கண்ணினார், உறையும் கழிப்பாலையே!
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து இரட்டிதோள துலங்க ஊன்றிய தூ மழுவாளினார் கலங்கள் வந்து உலவும், கழிப்பாலையை வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
ஆட்சியால் அலரானொடு மாலும் ஆய்த் தாட்சியால் அறியாது தளர்ந்தனர்; காட்சியால் அறியான் கழிப்பாலையை மாட்சியால்-தொழுவார் வினை மாயுமே.
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக் கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம் ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே!
அம் தண் காழி அருமறை ஞானசம்- பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச் சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர் முந்தி வான் உலகு ஆடல் முறைமையே.