பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக் குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்- சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்; “இறைவன்!” என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே
மாகத்திங்கள் வாள்முக மாதர் பாட, வார்சடைப் பாகத்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய பண்டங்கன்- மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான்; ஆகத்து ஏர் கொள் ஆமையைப் பூண்ட அண்ணல் அல்லனே!
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட, நீள் சடைக் கொடு வெண்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்- படு வண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்; கடுவெங்கூற்றைக் காலினால் காய்ந்த கடவுள் அல்லனே!
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட, கண்ணுதல், முதிர் ஆர் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய முக்கணன்- எதிர் ஆர் புனல் அம் புன்சடை எழில் ஆரும் சிற்றேமத்தான்; அதிர் ஆர் பைங்கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே!
வான் ஆர் திங்கள் வாள்முக மாதர் பாட, வார்சடைக் கூன் ஆர் திங்கள் சூடி, ஒர் ஆடல் மேய கொள்கையான்- தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான்; மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே!
பனி வெண்திங்கள் வாள்முக மாதர் பாட, பல்சடைக் குனி வெண்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான், தனி வெள்விடையன்-புள் இனத் தாமம் சூழ் சிற்றேமத்தான்; முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே!
கிளரும் திங்கள் வாள்முக மாதர் பாட, கேடு இலா வளரும் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய மா தவன்- தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான்; ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே!
சூழ்ந்த திங்கள் வாள்முக மாதர் பாட, சூழ்சடைப் போழ்ந்த திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய புண்ணியன்- தாழ்ந்த வயல் சிற்றேமத்தான்; தடவரையைத் தன் தாளினால் ஆழ்ந்த அரக்கன் ஒல்க, அன்று அடர்த்த அண்ணல் அல்லனே!
தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத் துணிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய தொன்மையான் அணிவண்ணச்சிற் றேமத்தா னலர்மேலந்த ணாளனும் மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வ னல்லனே .
வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப் பிள்ளைத்திங்கள் சூடியோ ராடன்மேய பிஞ்ஞகன் உள்ளத்தார்சிற் றேமத்தா னுருவார்புத்த ரொப்பிலாக் கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே .
கல்லிலோத மல்குதண் கானல்சூழ்ந்த காழியான் நல்லவாய வின்றமிழ் நவிலுஞான சம்பந்தன் செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால் வல்லராகி வாழ்த்துவா ரல்லலின்றி வாழ்வரே .