பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மரு அமர் குழல் உமை பங்கர், வார்சடை அரவு அமர் கொள்கை எம் அடிகள், கோயில் ஆம் குரவு, அமர் சுரபுனை, கோங்கு, வேங்கைகள் விரவிய பொழில் அணி விசயமங்கையே.
கீதம் முன் இசைதரக் கிளரும் வீணையர் பூதம் முன் இயல்பு உடைப் புனிதர், பொன் நகர் கோதனம் வழிபட, குலவு நால்மறை வேதியர் தொழுது எழு விசயமங்கையே.
அக்கு அரவு அரையினர், அரிவை பாகமாத் தொக்க நல் விடை உடைச் சோதி, தொல்-நகர் தக்க நல் வானவர், தலைவர், நாள்தொறும் மிக்கவர், தொழுது எழு விசயமங்கையே.
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு புடை மலி சடை முடி அடிகள் பொன் நகர் படை மலி மழுவினர், பைங்கண் மூரி வெள் விடை மலி கொடி அணல், விசயமங்கையே.
தோடு அமர் காதினன், துதைந்த நீற்றினன், ஏடு அமர் கோதையோடு இனிது அமர்வு இடம் காடு அமர் மா கரி கதறப் போர்த்தது ஓர் வேடம் அது உடை அணல் விசயமங்கையே.
மைப் புரை கண் உமை பங்கன், வண் தழல் ஒப்பு உரை மேனி எம் உடையவன், நகர் அப்பொடு மலர்கொடு அங்கு இறைஞ்சி, வானவர் மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே.
இரும் பொனின் மலைவிலின், எரிசரத்தினால், வரும் புரங்களைப் பொடிசெய்த மைந்தன் ஊர் சுரும்பு அமர் கொன்றையும், தூய மத்தமும், விரும்பிய சடை அணல் விசயமங்கையே.
உளங்கையில், இருபதோடு ஒருபதும் கொடு, ஆங்கு அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை, தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன் விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே.
மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறை அண்ணல்கள் தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர் தண் நறுஞ்சாந்தமும் பூவும் நீர்கொடு விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே
கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரை நஞ்சினும் கொடியன; நமர்கள் தேர்கிலார் செஞ்சடைமுடி உடைத் தேவன் நன்நகர் விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே.
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை, நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன், பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் புண்ணியர்; சிவகதி புகுதல் திண்ணமே.