பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா! ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன் செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே!
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா; எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை- அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடிச் சிட்டராய் அருள்கள் செய்வார், திருச் சோற்றுத் துறையனாரே.
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்! பல் இல் வெண்தலை கை ஏந்திப் பல் இலம் திரியும் செல்வர் சொல்லும் நன்பொருளும் ஆவார்-திருச் சோற்றுத் துறையனாரே.
கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண் ஓர் பாகம் இறையராய், இனியர் ஆகி, தனியராய், பனி வெண் திங்கள்- பிறையராய், செய்த எல்லாம் பீடராய், கேடு இல் சோற்றுத்- துறையராய், புகுந்து என் உள்ளச் சோர்வு கண்டு அருளினாரே.
பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்; “எந்தையே! ஏகமூர்த்தி!” என்று நின்று ஏத்தமாட்டேன்; பந்தம் ஆய், வீடும் ஆகி, பரம்பரம் ஆகி, நின்று சிந்தையுள்-தேறல் போலும்-திருச் சோற்றுத் துறையனாரே.
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்று மின், பேதை பங்கன் பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திற(ம்)மே! ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத் தீர்த்தம் ஆய்ப் போத விட்டார், திருச் சோற்றுத் துறையனாரே.
கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே காலம் போன, எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது; அந்தோ! முந்து அரா அல் குலாளை உடன் வைத்த ஆதிமூர்த்தி, செந் தாது புடைகள் சூழ்ந்த திருச் சோற்றுத் துறையனாரே.
அம் கதிரோன் அவ(ன்)னை அண்ணலாக் கருத வேண்டா; வெங் கதிரோன் வழீயே போவதற்கு அமைந்து கொண் மின்! அம் கதிரோன் அவ(ன்)னை உடன் வைத்த ஆதிமூர்த்தி- செங் கதிரோன் வணங்கும் திருச் சோற்றுத் துறையனாரே.
ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை நீதியால் நினைக்க மாட்டீர்; நின்மலன் என்று சொல்லீர் சாதியா நான் முக(ன்)னும் சக்கரத்தானும் காணாச் சோதி ஆய்ச் சுடர் அது ஆனார்-திருச் சோற்றுத் துறையனாரே.
மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில் பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்! கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்க, செற்று உகந்து அருளிச் செய்தார்-திருச் சோற்றுத் துறையனாரே.
காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல் மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
வண்டு அணை கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும், கொண்டு அணைந்து ஏறு முடி உடையான், குரை சேர் கழற்கே தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல் வெண் தலை மாலை அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
அளக்கும் நெறியினன், அன்பர்கள் தம் மனத்து ஆய்ந்து கொள்வான், விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர் கோன், துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் திளைக்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு, மால்விடை ஏறி, எங்கும் பேர்ந்த கை மான், நடம் ஆடுவர்; பின்னு சடை இடையே சேர்ந்த கைம் மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் ஏந்து கைச் சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே!
கூற்றைக் கடந்ததும், கோள் அரவு ஆர்த்ததும், கோள் உழுவை நீற்றில்-துதைந்து திரியும் பரிசு அதும், நாம் அறியோம்; ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும், சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே.
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர் கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்து இறைஞ்சச் சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே!
ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக் காயக் கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான், தூய வெண் நீற்றினன், சோற்றுத்துறை உறைவார், சடைமேல் பாயும் வெண் நீர்த்திரைக் கங்கை எம்மானுக்கு அழகியதே!
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன், தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல் இண்டை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
கடல் மணிவண்ணன், கருதிய நான்முகன் தான், அறியான்; விடம் அணி கண்டம் உடையவன்; தான் எனை ஆள் உடையான்; சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்; சடை மேல் படம் மணி நாகம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரியக் கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்து அழித்த துலங்கல் மழுவினான், சோற்றுத்துறை உறைவார், சடைமேல் இலங்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?