பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கடவூர் வீரட்டம்
வ.எண் பாடல்
1

மலைக் கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொள் ஆனை நினைப்புறு, நெஞ்சமே!
கொலைக் கை யானையும் கொன்றிடும் ஆதலால்,
கலைக் கையானை கண்டீர்-கடவூரரே.

2

வெள்ளி மால்வரை போல்வது ஓர் ஆனையார்;
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார்;
கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார்;
கள்ள ஆனைகண்டீர்- கடவூரரே.

3

ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்;
ஊனை வேவ உருக்கிய ஆனையார்;
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே,
கான ஆனைகண்டீர்-கடவூரரே.

4

ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார்;
நீலமேனி நெடும் பளிங்கு ஆனையார்;
கோலம் ஆய கொழுஞ் சுடர் ஆனையார்;
கான ஆனைகண்டீர்-கடவூரரே.

5

அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்;
வெளுத்த நீள்கொடி ஏறு உடை ஆனையார்
எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்;
களித்த ஆனைகண்டீர்-கடவூரரே.

6

விடுத்த மால்வரை விண் உற ஆனையார்;
தொடுத்த மால்வரை தூயது ஓர் ஆனையார்;
கடுத்த காலனைக் காய்ந்தது ஓர் ஆனையார்;
கடுத்த ஆனைகண்டீர்-கடவூரரே.

7

மண் உளாரை மயக்கு உறும் ஆனையார்;
எண் உளார் பலர் ஏத்திடும் ஆனையார்;
விண் உளார் பலரும்(ம்) அறி ஆனையார்;
கண்ணுள் ஆனைகண்டீர்-கடவூரரே.

8

சினக்கும் செம்பவளத்திரள் ஆனையார்;
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார்;
அனைக்கும் அன்பு உடையார் மனத்து ஆனையார்;
கனைக்கும் ஆனைகண்டீர்-கடவூரரே.

9

வேதம் ஆகிய வெஞ் சுடர் ஆனையார்;
நீதியால் நிலன் ஆகிய ஆனையார்;
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார்;
காதல் ஆனைகண்டீர்-கடவூரரே.

10

நீண்ட மாலொடு நான்முகன்தானும் ஆய்,
காண்டும் என்று புக்கார்கள் இருவரும்
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார்;
காண்டல் ஆனைகண்டீர்-கடவூரரே.

11

அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார்;
கடுத்த காலனைக் காய்ந்தது ஓர் ஆனையார்;
கடுக்கை ஆனைகண்டீர்-கடவூரரே.