பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்; நட்டம் நின்று நவில்பவர்-நாள்தொறும் சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் வட்டவார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே!
துன்னு வார்குழலாள் உமையாளொடும் பின்னு வார் சடைமேல் பிறை வைத்தவர், மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை, உன்னுவார் வினை ஆயின ஓயுமே.
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்; தெற்றினார் புரம் தீ எழச் செற்றவர்- சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார்; பற்றினார் அவர் பற்று, அவர்; காண்மினே!
மத்தமும் மதியும் வளர் செஞ்சடை முத்தர்; முக்குணர்; மூசு அரவம் அணி சித்தர்; தீவணர்-சீர் மணஞ்சேரி எம் வித்தர்; தாம் விருப்பாரை விருப்பரே.
துள்ளு மான்மறி, தூ மழுவாளினர்; வெள்ள நீர் கரந்தார், சடைமேல் அவர்;- அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் வள்ளலார்; கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே.
நீர் பரந்த நிமிர் புன்சடையின்மேல் ஊர் பரந்த உரகம் அணிபவர்- சீர் பரந்த திரு மணஞ்சேரியார்; ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே.
சுண்ணத்தர்; சுடுநீறு உகந்து ஆடலார்; விண்ணத்து அம் மதி சூடிய வேதியர்- மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார்; வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே.
துன்ன ஆடையர், தூ மழுவாளினர்; பின்னும் செஞ்சடைமேல் பிறை வைத்தவர்- மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் மன்னனார்; கழலே தொழ வாய்க்குமே.
சித்தர், தேவர்கள், மாலொடு, நான்முகன் புத்தர் தேர் அமண்கையர்-புகழவே, மத்தர்தாம் அறியார், மணஞ்சேரி எம் அத்தனார்; அடியார்க்கு அல்லல் இல்லையே.
கடுத்த மேனி அரக்கன், கயிலையை எடுத்தவன், நெடு நீள் முடிபத்து இறப் படுத்தலும், மணஞ்சேரி, அருள்! எனக் கொடுத்தனன், கொற்றவாளொடு நாமமே