பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஇடைமருது
வ.எண் பாடல்
1

சூலப்படை உடையார் தாமே போலும்; சுடர்த
திங்கள் கண்ணி உடையார் போலும்;
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும்;
மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்;
வேலைக்-கடல் நஞ்சம் உண்டார் போலும்;
மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்;
ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

2

கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணிபோலும்;
கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும்;
பாரார் பரவப்படுவார் போலும்; பத்துப்பல்
ஊழி பரந்தார் போலும்;
சீரால் வணங்கப்படுவார் போலும்; திசைஅனைத்தும்
ஆய், மற்றும் ஆனார் போலும்;
ஏர் ஆர் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே!.

3

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்;
விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்;
பூதங்கள் ஆய புராணர் போலும்;
புகழ வளர் ஒளி ஆய் நின்றார் போலும்;
பாதம் பரவப்படுவார் போலும்; பத்தர்களுக்கு
இன்பம் பயந்தார் போலும்;
ஏதங்கள் ஆன கடிவார் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

4

திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித் திசை
வணங்கச் சேவடியை வைத்தார் போலும்;
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி,
வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும்;
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப்
பரங்குன்றம் மேய பரமர் போலும்;
எண் குணத்தார்; எண்ணாயிரவர் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

5

ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர்
பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்,
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி,
படுவெண் தலையில் பலி கொள்வாரும்,
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும்,
மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும்,
ஏகம்பம் மேயாரும், எல்லாம் ஆவார்-இடைமருது
மேவிய ஈசனாரே.

6

ஐ-இரண்டும், ஆறு ஒன்றும், ஆனார் போலும்; அறு-மூன்றும்,
நால்-மூன்றும் ஆனார் போலும்;
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும்; திசை
அனைத்தும் ஆய் நிறைந்த செல்வர் போலும்;
கொய் மலர் அம் கொன்றைச் சடையார் போலும்; கூத்து
ஆட வல்ல குழகர் போலும்;
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

7

பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சு ஆய்,
பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடு ஒன்று ஆய்,
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர்;
விரிவு இலாக் குணம் நாட்டத்து ஆறே என்பர்;
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும்
பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும்,
எரி ஆய தாமரைமேல் இயங்கினாரும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

8

தோலின் பொலிந்த உடையார் போலும்; சுடர் வாய்
அரவு அசைத்த சோதி போலும்;
ஆலம் அமுதுஆக உண்டார்போலும்;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனார் போலும்;
காலனையும் காய்ந்த கழலார் போலும்;
கயிலாயம் தம் இடமாகக் கொண்டார் போலும்;
ஏலம் கமழ்குழலாள் பாகர் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

9

பைந்தளிர்க் கொன்றை அம்தாரார் போலும்;
படைக்கணாள் பாகம் உடையார் போலும்;
அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்;
அணி நீலகண்டம் உடையார் போலும்;
வந்த வரவும் செலவும் ஆகி, மாறாது என்
உள்ளத்து இருந்தார் போலும்;
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

10

கொன்றை அம் கூவிள மாலை தன்னைக்
குளிர்சடைமேல் வைத்து உகந்த கொள்கையாரும்,
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு
உருவம் ஆய் நின்ற நிமலனாரும்,
அன்று அ(வ்)வ் அரக்கன் அலறி வீழ
அரு வரையைக் காலால் அழுத்தினாரும்,
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஇடைமருது
வ.எண் பாடல்
1

ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்;
படை உடையர்; அம் பொன்தோள் மேல்
நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம்
பலி கொள்வர்; மொய்த்த பூதம்
கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள்
தால வேடத்தர்; கொள்கை சொல்லின்,
ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

2

மங்குல் மதி வைப்பர்; வான நாடர்; மடமான்
இடம் உடையர்; மாதராளைப்
பங்கில் மிக வைப்பர்; பால் போல் நீற்றர்;
பளிக்குவடம் புனைவர்; பாவநாசர்;
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர்;
சரிதை பல உடையர்; தன்மை சொல்லின்,
எங்கும் பலி திரிவர்; என் உள் நீங்கார்-இடைமருது
மேவி இடம்கொண்டாரே.

3

ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அரு
வரையின் உச்சியர்; ஆணர்; பெண்ணர்;
காலம்பல கழித்தார்; கறை சேர் கண்டர்;
கருத்துக்குச் சேயார், தாம், காணாதார்க்கு;
கோலம்பல உடையர்; கொல்லை ஏற்றர்;
கொடு மழுவர்; கோழம்பம் மேய ஈசர்;
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார்-இடைமருது
மேவி இடம்கொண்டாரே.

4

தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்;
திரு ஆரூர் என்றும் உள்ளார்;
வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்;
மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்;
நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு
நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும்
ஈசர்; புனல் பொன்னித்தீர்த்தர்-வாய்த்த
இடைமருது மேவி இடம் கொண்டாரே.

5

கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு; உள்ளம்
கரவாதே தம் நினையகிற்பார் பாவம்
துரப்பர்; தொடு கடலின் நஞ்சம் உண்பர்;
தூய மறை மொழியார்; தீயால் ஒட்டி
நிரப்பர்; புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள்
சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம்
இரப்பர்; எமை ஆள்வர்; என் உள்
நீங்கார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.

6

கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடி, குளிர்
கொன்றை மேல் வைப்பர்; கோலம் ஆர்ந்த
பொடி ஆரும் மேனியர்; பூதிப் பையர்;
புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண நூலர்;
அடியார் குடி ஆவர்; அந்தணாளர் ஆகுதியின்
மந்திரத்தார்; அமரர் போற்ற
இடி ஆர் களிற்று உரியர்-எவரும் போற்ற
இடைமருது மேவி இடம் கொண்டாரே.

7

பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்;
பிழைஎல்லாம் நீக்கி ஆள்வர்;
கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று
கை ஏந்தி, இல்லம் தோறும்
பிச்சைக் கொள நுகர்வர்; பெரியர், சால; பிறங்கு
சடைமுடியர்; பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

8

கா ஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம்
மன்னினார்; பன்னும் இன்சொல்
பா ஆர் பொருளாளர்; வாள் ஆர் கண்ணி
பயிலும் திரு உருவம் பாகம் மேயார்;
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர்; புரம்
மூன்றும் ஒள் அழலாக் காயத் தொட்ட
ஏ ஆர் சிலை மலையர்; எங்கும், தாமே;-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

9

புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில்
ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில்
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும்
பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில்
எரிந்தார் அனல்,-உகப்பர்,-ஏழில் ஓசை; எவ்
இடத்தும் தாமே என்று ஏத்துவார் பால்
இருந்தார்-இமையவர்கள் போற்ற என்றும்
இடைமருது மேவி இடம் கொண்டாரே.

10

விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்;
விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்;
மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்;
மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்;
சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று
செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால்
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார்,
வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே.