பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநெய்த்தானம்
வ.எண் பாடல்
1

வகை எலாம் உடையாயும் நீயே என்றும், வான்
கயிலை மேவினாய் நீயே என்றும்,
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும், வெண்காடு
மேவினாய் நீயே என்றும்,
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும்,
பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்,
திகை எலாம் தொழச் செல்வாய் நீயே என்றும்,
நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

2

ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும்,
ஆதிக்கயிலாயன் நீயே என்றும்,
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும், “கோடிகா
மேய குழகா!” என்றும்,
பார்த்தற்கு அருள் செய்தாய் நீயே என்றும்,
“பழையனூர் மேவிய பண்பா!” என்றும்,
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும், நின்ற
நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

3

அல் ஆய்ப் பகல் ஆனாய் நீயே என்றும், ஆதிக்
கயிலாயன் நீயே என்றும்,
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும், காளத்திக்
கற்பகமும் நீயே என்றும்,
சொல் ஆய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும்,
சோற்றுத்துறை உறைவாய் நீயே என்றும்,
செல் வாய்த் திரு ஆனாய் நீயே என்றும், நின்ற
நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

4

மின் நேர் இடைபங்கன் நீயே என்றும், வெண்
கயிலை மேவினாய் நீயே என்றும்,
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும், பூதகண
நாதன் நீயே என்றும்,
என் நா இரதத்தாய் நீயே என்றும், ஏகம்பத்து என்
ஈசன் நீயே என்றும்,
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும், நின்ற
நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

5

முந்தி இருந்தாயும் நீயே என்றும், முன் கயிலை
மேவினாய் நீயே என்றும்,
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும், நடம்
ஆடி நள்ளாறன் நீயே என்றும்,
பந்திப்ப(அ)ரியாயும் நீயே என்றும், பைஞ்ஞீலி
மேவினாய் நீயே என்றும்,
சித்திப்ப(அ)ரியாயும் நீயே என்றும், நின்ற
நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

6

தக்கார் அடியார்க்கு நீயே என்றும், தலை ஆர்
கயிலாயன் நீயே என்றும்,
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும், ஆக்கூரில்-
தான் தோன்றி நீயே என்றும்,
புக்கு ஆய ஏழ் உலகும் நீயே என்றும், புள்ளிருக்கு
வேளுராய் நீயே என்றும்,
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும், நின்ற
நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

7

புகழும் பெருமையாய் நீயே என்றும், பூங் கயிலை
மேவினாய் நீயே என்றும்,
இகழும் தலை ஏந்தி நீயே என்றும், இராமேச்சுரத்து
இன்பன் நீயே என்றும்,
அகழும் மதில் உடையாய் நீயே என்றும், ஆலவாய்
மேவினாய் நீயே என்றும்,
திகழும் மதிசூடி நீயே என்றும், நின்ற நெய்த்தானா!
என் நெஞ்சு உளாயே.

8

வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும்,
வானக் கயிலாயன் நீயே என்றும்,
கானம் நடம் ஆடி நீயே என்றும், கடவூரில்
வீரட்டன் நீயே என்றும்,
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும், ஒற்றியூர்
ஆரூராய் நீயே என்றும்,
தேன் ஆய் அமுது ஆனாய் நீயே என்றும், நின்ற
நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

9

தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும், தலை
ஆர் கயிலாயன் நீயே என்றும்,
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும்,
ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்,
முந்திய முக்கணாய் நீயே என்றும், மூவலூர்
மேவினாய் நீயே என்றும்,
சிந்தையாய், தேனூராய் நீயே என்றும், நின்ற
நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

10

மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும்; வான்
கயிலை மேவினாய் நீயே என்றும்;
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும்;
வீழிமிழலையாய் நீயே என்றும்;
அறத்தாய், அமுது ஈந்தாய் நீயே என்றும்;
யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு,
பொறுத்தாய், புலன் ஐந்தும், நீயே என்றும்; நின்ற
நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநெய்த்தானம்
வ.எண் பாடல்
1

மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக் குறை முடித்து, வினைக்குக் கூடு ஆம்
இத் தானத்து இருந்து, இங்ஙன் உய்வான் எண்ணும்
இதனை ஒழி! இயம்பக் கேள்: ஏழை நெஞ்சே!
மைத்து ஆன நீள் நயனி பங்கன், வங்கம் வரு திரை
நீர் நஞ்சு உண்ட கண்டன், மேய
நெய்த்தான நன்நகர் என்று ஏத்தி நின்று, நினையுமா
நினைந்தக்கால் உய்யல் ஆமே.

2

“ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை-இது நீங்கல்
ஆம்; விதி உண்டு” என்று சொல்ல
வேண்டாவே; நெஞ்சமே! விளம்பக் கேள், நீ;
விண்ணவர் தம் பெருமானார், மண்ணில் என்னை
ஆண்டான், அன்று அரு வரையால் புரம்மூன்று எய்த
அம்மானை, அரி அயனும் காணா வண்ணம்
நீண்டான், உறை துறை நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

3

பரவிப் பலபலவும் தேடி, ஓடி, பாழ் ஆம் குரம்பை
இடைக் கிடந்து, வாளா
குரவி, குடிவாழ்க்கை வாழ எண்ணி, குலைகை தவிர்,
நெஞ்சே! கூறக் கேள், நீ;
இரவிக்குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த
கோடி அமரர் ஆயம்
நிரவிக்க(அ)அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா
நினைந்தக்கால் உய்யல் ஆமே.

4

அலை ஆர் வினைத் திறம் சேர் ஆக்கையுள்ளே
அகப்பட்டு, உள் ஆசை எனும் பாசம் தன்னுள்
தலை ஆய், கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து
தளர்ந்து, மிக, நெஞ்சமே, அஞ்ச வேண்டா!
இலை ஆர் புனக் கொன்றை, எறிநீர், திங்கள்,
இருஞ்சடைமேல் வைத்து உகந்தான்; இமையோர் ஏத்தும்
நிலையான; உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா
நினைந்தக்கால் உய்யல் ஆமே.

5

தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம்
கூட்டைப் பொருள் என்று மிக உன்னி, “மதியால் இந்த
அனைத்து உலகும் ஆளல் ஆம்” என்று பேசும்
ஆங்காரம் தவிர், நெஞ்சே! அமரர்க்கு ஆக
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற, அன்று,
முடுகிய வெஞ்சிலை வளைத்து, செந்தீ மூழ்க
நினைத்த பெருங் கருணையன் நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

6

மிறை படும் இவ் உடல் வாழ்வை மெய் என்று எண்ணி,
வினையிலே கிடந்து அழுந்தி, வியவேல், நெஞ்சே!
குறைவு உடையார் மனத்து உளான்; குமரன் தாதை; கூத்து
ஆடும் குணம் உடையான்; கொலை வேல் கையான்;
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப,
அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவு உடையான்; இடம் ஆம் நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

7

பேசப் பொருள் அலாப் பிறவி தன்னைப் பெரிது
என்று உன் சிறு மனத்தால் வேண்டி, ஈண்டு
வாசக்குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு,
வீழாதே வருக, நெஞ்சே!
தூசக் கரி உரித்தான்; தூநீறு ஆடித் துதைந்து
இலங்கு நூல் மார்பன்; தொடரகில்லா
நீசர்க்கு அரியவன்; நெய்த்தானம் என்று நினையுமா
நினைந்தக்கால் உய்யல் ஆமே.

8

அஞ்சப் புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு,
அருநோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை
தஞ்சம் எனக் கருதி, தாழேல், நெஞ்சே! தாழக்
கருதுதியே? தன்னைச் சேரா
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணிகண்டன்,
“வானவர் தம் பிரான்!” என்று ஏத்தும்
நெஞ்சர்க்கு இனியவன், நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

9

பொருந்தாத உடல் அகத்தின் புக்க ஆவி போம்
ஆறு அறிந்து அறிந்தே, புலை வாழ்வு உன்னி,
இருந்து, ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா; நெஞ்சே!
இமையவர் தம் பெருமான்; அன்று உமையாள் அஞ்ச,
கருந்தாள மதகரியை வெருவக் கீறும் கண்ணுதல்;
கண்டு அமர் ஆடி, கருதார் வேள்வி;
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

10

உரித்து அன்று, உனக்கு இவ் உடலின் தன்மை;
உண்மை உரைத்தேன்; விரதம் எல்லாம்
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே! தம்மிடையில்
இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன்;
எரி(த்)த்தான்; அனல் உடையான்; “எண்தோளானே!
எம்பெருமான்!” என்று ஏத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை, நெய்த்தானம் மேவினானை, நினையுமா
நினைந்தக்கால் உய்யல் ஆமே.