பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு படர் வினை பற்று அறப் பார்த்துக் கை வைத்து நொடியின் அடி வைத்து நுண் உணர்வு ஆக்கிக் கடிய பிறப்பு அறக் காட்டினன் நந்தியே.
உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன வியவார் பரமும் பின் மேவும் பிராணன் செயலார் சிவமும் சிற் சத்தி ஆதிக்கே உயலார் குருபரன் உய்யக் கொண்டானே.
பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன் நிச்சலும் என்னை நினை என்ற அப்பொருள் உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது வைச்ச பதம் இது வாய் திறவாதே.
பொட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவேனை பொட்டடித்து உள்ளமார் மாசு எல்லாம் வாங்கிப்பின் தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே.
தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம் கருக் கொண்ட ஈசனைக் கண்டு கொண்டேனே.
கூடும் உடல் பொருள் ஆவி குறிக் கொண்டு நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால் பாடல் உடலினில் பற்று அற நீக்கியே கூடிய தான் அவன் ஆம் குளிக் கொண்டே.
கொண்டான் அடியேன் அடிமை குறிக் கொள்ளக் கொண்டான் உயிர் பொருள் காயக் குழாத்தினைக் கொண்டான் பலம் முற்றும் தந்தவன் கோடலால் கொண்டான் என ஒன்றும் கூற கிலேனே.
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி நெறிக்கும் பிராணன் நிலை பெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை பிறக்க அறியா தார் பேயுடன் ஒப்பாரே.
உணர்வு உடையார் கட்கு உலகமும் தோன்றும் உணர்வு உடையார் கட்கு உறு துயர் இல்லை உணர்வு உடையார்கள் உணர்ந்த அக் காலம் உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.
காயப் பரப்பில் அலைந்து துரியத்துச் சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆய அவ்வாறு அடைந்து திரிந்தோர்க்குத் தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே.
நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல் ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று வான் என வானவர் நின்று மனிதர்கள் தேன் என இன்பம் திளைக்கின்ற வாறே.
அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவன் இவன் ஆமே.
நான் இது தான் என நின்றவன் நாள் தோறும் ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன் வான் இரு மாமுகில் போல் பொழிவான் உளன் நான் இது வம்பர நாதனும் ஆமே.
பெரும் தன்மை தான் என யான் என வேறு ஆய் இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும் பொருந்தும் உடல் உயிர் போலும் ஐ மெய்யே திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே.