பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நனவு ஆதி மூன்றினில் சீவ துரியம் தனது ஆதி மூன்றினில் பர துரியம் தான் நனவு ஆதி மூன்றினில் சிவ துரியம் ஆம் இனது ஆகும் தொந்தத் தசி பதத்து ஈடே.
தானா நனவில் துரியம் தன் தொம் பதம் தான் ஆம் துரிய நனவு ஆதி தான் மூன்றில் ஆனாப் பர பதம் அற்ற தரு நனா வான் ஆன மேல் மூன்றும் துரியம் அணுகுமே.
அணுவின் துரியத்து நான்கும் அது ஆகிப் பணியும் பரதுரியம் பயில் நான்கும் தணிவில் பரம் ஆகிச் சார் முத்துரியக் கணுவில் இந்நான்கும் கலந்த ஈர் ஐந்தே.
ஈர் ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள் நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று பார் அந்தம் ஆன பரா பரத்து அயிக்கியத்து ஓர் அந்தம் ஆம் இரு பாதியைச் சேர்த்திடே.
தொட்டே இருமின் துரிய நிலத்தினை எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனைப் பட்டு ஆங்கு அறிந்திடில் பல் நா உதடுகள் தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே.
அறிவாய் அசத்து என்னும் மாறா அகன்று செறிவு ஆய மாயை சிதைத்து அருளாலே பிரியாத பேர் அருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலை அறிந்தாரே.
நனவின் நனவு ஆதி நால் ஆம் துரியம் தனது உயிர் தொம் பதம் ஆமாறு போல வினை அறு சீவன் நனவு ஆதி ஆகத்து அனைய பர துரியம் தற் பதமே.
தொம் பதம் தற்பதம் சொல் முத்துரியம் போல் நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம் அம்புவி உன்னா அதி சூக்கம் அப்பாலைச் செம் பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே.