பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / ஞானிசெயல்
வ.எண் பாடல்
1

முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர்
பின்னை வினைக் கணார் பேர்ந்து அறப் பார்ப்பார்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே.

2

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலே.

3

மன வாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மன வாக்கு நேர் நிற்கில் வல்வினை மன்னா
மன வாக்குக்கு எட்ட அவர் வாதனை தன்னால்
தனை மாற்றி ஆற்றத் தகு ஞானி தானே.

4

நிற்றல் இருத்தல் கிடத்தல் நடை ஓடல்
பெற்ற அக்காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானந்தம் தானந்தம் தங்கவே
உற்ற பிறப்பு அற்று ஒளிர் ஞான நிட்டையே.