பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / திருக்கூத்துத் தரிசனம் / சிவானந்தக் கூத்து
வ.எண் பாடல்
1

தான் அந்தம் இல்லாச் சதானந்த சத்தி மேல்
தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர்
ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்து ஆட ஆட அரங்கு ஆனதே.

2

ஆனந்தம் ஆடு அரங்கம் ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல் இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே.

3

ஒளி ஆம் பரமும் உளது ஆம் பரமும்
அளியார் சிவகாமி ஆகும் சமயக்
களியார் பரமும் கருதுறை அந்தத்
தெளிவு ஆம் சிவ ஆனந்த நட்டத்தின் சித்தியே.

4

ஆன நடம் ஐந்து அகள சகளத்தர்
ஆன நடம் ஆடி ஐங் கருமத்து ஆக
ஆன தொழில் அருளால் ஐந் தொழில் செய்தே
தேன் மொழி பாகன் திரு நடம் ஆடுமே.

5

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங் கருமத்து ஆண்ட தற்பரம்
தேகாந்தம் ஆம் பிரமாண்டத்த என்பவே.

6

வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழ் ஆடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞான ஆனந்தக் கூத்தே.

7

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட மைங்கரு மத்தாண்ட தற்பரத்து
ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே.

8

வேதங்கள் ஓட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழு ஆடப்
பூதங்கள் ஆடப் புவன முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்தக் கூத்தே.

9

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே.

10

தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியா தரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சரா சரம்
யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே.