பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / ஞானோதயம்
வ.எண் பாடல்
1

மன சந்தியில் கண்ட மன்நனவு ஆகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் ஈது ஒழி என்ப
இனம் உற்ற் ஆனந்தி ஆனந்தம் இரண்டே.

2

கரி அட்ட கையன் கபாலம் கை ஏந்தி
எரியும் இளம் பிறை சூடும் எம்மானை
அரியன் பெரியன் என்று ஆட் பட்டது அல்லால்
கரியன் கொல் சேயன் கொல் காண்கின்றிலேனே.

3

உண்ணல் உறங்கல் உலாவல் உயிர்போதல்
நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப்
பண்ணல் அவன்பணியால் இவன் பாலிடை
திண்ணிதில் செய்கை சிவன் பணி ஆகுமே.

4

ஓடும் இருக்கும் கிடக்கும் உடன் எழுந்து
ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும்
பாடும் புறத்து எழும் பல்லுயிர் ஆனந்தம்
கூடும் பொழுதில் குறிப்பு இவை தான் அன்றே.

5

மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன் உரை ஞானத்தை
நக்கார் கழல் வழி நாடுமின் நீரே.

6

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு உள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே.

7

தத்துவம் எங்கு உண்டு தத்துவன் அங்கு உண்டு
தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின்
தத்துவன் அங்கே தலைப்படும் தானே.

8

விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ் ஞானத்து உள்ளே
அசும்பின் நின்று ஊறிய தார் அமுதாகும்
பசும் பொன் திகழும் படர் சடை மீதே
குசும்ப மலர்க் கந்தம் கூடி நின்றானே.

9

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
கொத்தும் பசும் பொன்னின் தூ ஒளி மாணிக்கம்
ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை
எத்தன்மை வேறு என்று கூறு செய்வீரே.

10

நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும்
நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது
நான் என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே.

11

ஞானத்தின் நன் நெறி நாத அந்த நல் நெறி
ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல்
ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல்
ஞானத்தின் நல் மோன நாத அந்த வேதமே.

12

உய்ய வல்லார் கட்கு உயிர் சிவ ஞானமே
உய்ய வல்லார் கட்கு உயிர் சிவ தெய்வமே
உய்ய வல்லார் கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்ய வல்லார் அறிவு உள் அறிவு ஆமே.

13

காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும்
காண வல்லார்க்குக் கடலின் அமுது ஒக்கும்
பேண வல்லார்க்குப் பிழைப்பு இலன் பேர் நந்தி
ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே.

14

ஓம் எனும் ஓர் எழுத்து உள் நின்ற ஓசை போல்
மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய் நின்ற செஞ் சுடர் எம் பெருமான் அடி
ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே.