பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / சத்திய ஞானாந்தம்
வ.எண் பாடல்
1

எப்பாழும் பாழும் யாவும் ஆய் அன்றாகி
முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து
தற்பர ஞான ஆனந்தம் தான் அது ஆகுமே.

2

மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மாசோபை
அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் ஆறது
இன்னிய வுற்பலம் ஒண்சீர் நிறமணம்
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.

3

சத்தி சிவன் பரஞானமும் சாற்றும் கால்
உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வரு குரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.

4

உருஉற் பலம் நிறம் ஒண் மணம் சோபை
தரநிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில்
மருவச் சிவம் என்ற மா முப் பதத்தின்
சொரு பத்தன் சத்தி ஆதி தோன்ற நின்றானே.

5

நினையும் அளவின் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும் எம்கோன் நந்தி தன் அருள் கூட்டி
நினையும் அளவில் நினைப் பித்தனனே.

6

பாலொடு தேனும் பழத்து உள் இரதமும்
வாலிய பேர் அமுதாகும் மதுரமும்
போலும் துரியம் பொடி பட உள் புகச்
சீலம் மயிர்க்கால் தொறும் தேக்கிடுமே.

7

அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே.

8

மத்திமம் ஆறு ஆறு மாற்றி மலம் நீக்கிச்
சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்றுப்
பெத்தம் அறச் சிவம் ஆகிப் பிறழ் உற்றுச்
சத்திய ஞான ஆனந்தம் சார்ந்தனன் ஞானியே.

9

சிவம் ஆய் அம் ஆன மும் மலம் தீரப்
பவம் ஆன முப்பாழைப் பற்று அறப் பற்றத்
தவம் ஆன சத்திய ஞான ஆனந்தத்தே
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே.