பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / முத்தி பேதம் - கரும நிருவாணம்
வ.எண் பாடல்
1

ஓதிய முத்தி அடைவே உயிர் பர
பேதம் இல் அச் சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே
ஏதம் இலா நிருவாணம் பிறந்தவே.

2

பற்று அற்றவர் பற்றி நின்ற பரம் பொருள்
கற்று அற்றவர் கற்றுக் கருதிய கண்நுதல்
சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை
பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே.

3

சித்தம் சிவமாம் சிவஞானி சேர்விடம்
சத்தச் சிவாலயம் தொல் பாச நாசமாம்
அத்த மழையகம் அனந்த மேலிடும்
முத்தம் பெருகும் முழுப் பொருள் ஆகுமே.

4

ஆணவ மூலத்து அகாரம் உதித்திடப்
பேணி உகாரம் கலாதி பிறிவிக்கத்
தாணு மகாரம் சதாசிவம் ஆகவே
ஆணவ பாசம் அடர்தல் செய்யா அன்றே.

5

நெற்றி நடுவுள் நினைவு எழு கண்டமும்
உற்ற விதையமும் ஓதிய நாபிக்கீழ்ப்
பெற்ற துரியமும் பேசிய மூலத்தே
உற்ற அதீதம் ஒடுங்கும் உடன் அன்றே.