பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எட்டிப் பழுத்த இரும் கனி வீழ்ந்தன ஒட்டிய நல் அறம் செய்யாதவர் செல்வம் வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர் பயன் அறியாரே.
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளும் குறுகிப் பிழிந்தன போலத் தம் பேர் இடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம் அறியாரே.
அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும் திறம் அறியார் சிவலோக நகர்க்குப் புறம் அறியார் பலர் பொய்ம் மொழிகேட்டு மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே.
இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் தருமம் செய்யாதவர் தம் பாலது ஆகும் உரும் இடி நாகம் உரோணி கழலை தருமம் செய்வார் பக்கல் தாழ கிலாவே.
பரவப் படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார் கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார் நரகத்தில் நிற்றிரோ நாள் எஞ்சினீரே.
வழி நடப்பார் இன்றி வானோர் உலகம் கழி நடப்பார் நடந்து ஆர் கருப்பாரும் அழி நடக்கும் வினை மாசு அற ஓட்டிட வழி நடக்கும் அளவு வீழ்ந்து ஒழிந்தாரே.
கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர் துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர் மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே.
இன்பம் இடர் என்று இரண்டு உற வைத்தது முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே.
கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன் நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யில் பசு அது ஆமே.
செல்வம் கருதிச் சிலர் பலர் வாழ்வு எனும் புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லம் கருதி இறைவனை ஏத்துமின் வில்லி இலக்கு எய்த வில் குறி ஆமே.