பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

முதல் தந்திரம் / இளமை நிலையாமை
வ.எண் பாடல்
1

கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக் கண்டும் தேறார் விழி இலா மாந்தர்
குழக் கன்று மூத்து எருதாய்ச் சில நாளில்
விழக் கண்டும் தேறார் வியன் உலகோரே.

2

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.

3

தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடை முறை
ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்து அற்ற கங்கைப் படர் சடை நந்தியை
ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே.

4

விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக் கொண்ட நீர் போல்
அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்குக்
கரும்பு ஒத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தேனே.

5

பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்புவன் யானே.

6

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அவ் ஈசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே.

7

*************

8

கண்ணதும் காய் கதி ரோனும் உலகினை
உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண் உறுவாரையும் வினை உறுவாரையும்
எண் உறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே.

9

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்து கண்டேனே.