பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்து அருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்து அன்பு செய்து அருள் கூரவல்லார்க்கு மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அதுவாமே.
இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன் துன்பப் பிறவித் தொழில் பல என்னினும் அன்பில் கலவி செய்து ஆதிப் பிரான் வைத்த முன்பு இப் பிறவி முடிவது தானே.
அன்பு உறு சிந்தையின் மேல் எழும் அவ் ஒளி இன்பு உறு கண்ணியொடு ஏற்க இசைந்தன துன்பு உறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று நண்பு உறு சிந்தையை நாடுமின் நீரே.
புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி அணைத்தலும் இன்பம் அது இது ஆமே.
உற்று நின்றாரொடு அத்தகு சோதியைச் சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை பத்திமையாலே பணிந்து அடியார் தொழ முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே.
கண்டேன் கமழ் தரு கொன்றையினான் அடி கண்டேன் கரி உரியான் தன் கழல் இணை கண்டேன் கமல மலர் உறைவான் அடி கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே.
நம்பனை நானா விதப் பொருள் ஆகும் என்று உம்பரில் வானவர் ஓதும் தலைவனை இன்பனை இன்பத்து இடை நின்று இரதிக்கும் அன்பனை யாரும் அறிய கிலாரே.
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர் இன்பப் பிறப்பும் இறப்பும் இலான் நந்தி அன்பில் அவனை அறிய கிலாரே.
ஈசன் அறியும் இராப் பகலும் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களைத் தேசு உற்று அறிந்து செயல் அற்று இருந்திடில் ஈசன் வந்து எம் இடை ஈட்டி நின்றானே.
விட்டுப் பிடிப்பது என் மே தகு சோதியைத் தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.