பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கல்லாதவரும் கருத்து அறி காட்சியை வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர் கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும் கல்லாதார் இன்பம் காணு கிலாரே.
வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார் அல்லாதவர்கள் அறிவுபல என்பார் எல்லா இடத்தும் உளன் எங்கள்தம் இறை கல்லாதவர்கள் கலப்பு அறியாரே.
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள் எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே.
கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன் கல்லேன் அரன் நெறி அறியாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின் உள் கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே.
நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி வல்லார் அறத்தும் தத்துவத்து உளும் ஆயினோர் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத் துயர் போகம் செய்வாரே.
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது மண்ணினின் உள்ளே மதித்து மதித்து நின்று எண்ணி எழுதி இளைத்து விட்டாரே.
கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் காண ஒண்ணாது கணக்கு அறிந்தார்க்கு அன்றிக்கை கூடா காட்சி கணக்கு அறிந்து உண்மையைக் கண்டு அண்ட நிற்கும் கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே.
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்து அறியாரே.
கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள் சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள் மற்றும் பல திசை காணார் மதி இலோர் கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே.
ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம் ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற சோதி நடத்தும் தொடர் அறியாரே.