பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / மூவகைச் சீவ வர்க்கம்
வ.எண் பாடல்
1

சக்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி
ஒத்த இருமாயா கூட்டத்து இடை பூட்டிச்
சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவ மயம் ஆக்குமே.

2

விஞ்ஞானர் நால்வரும் மெய்ப் பிரள யாகல் அத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம்
விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே.

3

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
தஞ் ஞானர் அட்டவித் தேசராம் சார்ந்து உளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே.

4

இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவது உள்ளே இருமல பெத்தர்
இரண்டாகும் நூற்று எட்டு ருத்திரர் என்பர்
முரண் சேர் சகலத்தர் மும்மலத்தாரே.

5

பெத்தத்த சித்தொடு பேண் முகத்தச் சித்து அது
ஒத்திட்டு இரண்டிடை ஊடு உற்றார் சித்தும் ஆய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்கத்து அமிழ்ந்து சகலத்து உளாரே.

6

சிவம் ஆகி ஐவகைத் திண்மலம் செற்றோர்
அவம் ஆகார் சித்தர் முத் தாந் தத்து வாழ்வார்
பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர்
நவம் ஆன தத்துவம் நாடிக் கண்டோரே.

7

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச் சகலத்தர் சகலராம்
விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே.

8

விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டுப் போய்
மெய்ஞ் ஞானர் ஆகிச் சிவம் மேவல் உண்மையே.

9

ஆண வந்துற்ற வவித்தா நனவு அற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே
சேண் உயர் சத்தி சிவ தத்துவம் ஆமே.