பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன் உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே.
சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும் கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே.
அஞ்சனம் போன்று உடலை அறு மந்தியில் வஞ்சக வாத மறுமத் தியானத்தில் செம் சிறு காலையில் செய்திடல் பித்து அறும் நஞ்சு அறச் சொன்னோம் நரை திரை நாசமே.
மூன்று மடக்கு உடைப் பாம்பு இரண்டு எட்டுள் வேன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம் நான்ற இம் முட்டை இரண்டையும் கட்டி இட்டு ஊன்றி இருக்க உடம்பு அழியாதே.
நூறும் அறுபதும் ஆறும் வலம் வர நூறும் அறுபதும் ஆறும் இடம் வர நூறும் அறுபதும் ஆறும் எதிர் இட நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.
சத்தியார் கோயில் இடம் வலம் சாதித்தான் மத்தியானத் திலே வாத்தியம் கேட்கலாம் தித் தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணையே.
திறத் திறம் விந்து திகழும் ஆகாரம் உறப் பெறவே நினைந்து ஓதும் சகார மறிப்பது மந்திர மன்னிய நாதம் மறப் பெற யோகிக்கு அற நெறி ஆமே.
உந்திச் சுழியின் உடன் நேர் பிராணனைச் சிந்தித்து எழுப்பிச் சிவ மந்திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித்து எழுப்பச் சிவன் அவன் ஆமே.
மாறா மலக் குதம் தன் மேல் இரு விரல் கூறா இலிங்கத்தின் கீழே குறிக் கொண்மின் ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன் கூறா உபதேசம் கொண்டது காணுமே.
நீல நிறன் உடை நேர் இழையா ளொடும் சாலவும் புல்லிச் சதம் என்று இருப்பார்க்கு ஞாலம் அறிய நரை திரை மாறிடும் பாலனும் ஆவர் பரா நந்தி ஆணையே.
அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு இல்லை பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும் உண்டி சுருங்கில் உபாயம் பல உள கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.
பிண்டத்து உள் உற்ற பிழக் கடை வாசலை அண்டத்து உள் உற்று அடுத்து அடுத்து ஏகிடில் வண்டிச் சிக்கு மலர்க் குழல் மாதரார் கண்டிச் சிக்கு நல் காயமும் ஆமே.
சுழலும் பெரும் கூற்றுத் தொல்லை முன் சீறி சுழலும் இரத்தத்து உள் அங்கி உள் ஈசன் கழல் கொள் திருவடி காண்கு உறில் ஆங்கே நிழல் உளுந்து எற்றுளும் நிற்றலும் ஆமே
நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும் தான் கண்ட வாயுச் சரீரம் முழுதொடும் ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக மான் கன்று நின்று வளர்கின்ற வாறே.
ஆகும் சன வேத சத்தியை அன்பு உற நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை பாகு படுத்திப் பல் கோடி களத்தினால் ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே.