பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

பட்டினத்து அடிகள் / திருக்கழுமல மும்மணிக்கோவை
வ.எண் பாடல்
1

திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூ(று)
இமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த

5
அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த

வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
கதிர்விடு நின்முகங் காண்தொறுங் காண்தொறும்
முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்

10
தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை

இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதஞ் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த

15
மலைமகள் தனாது நயனக் குவளைநின்

பொலிவினொடு மலர மறையோர்
கழுமலம் நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்(கு)

20
ஒன்றா வந்த குன்றா வெள்ளத்(து)

உலகம்மூன் றுக்குங் களைகண் ஆகி
முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த

25
‘அன்னா யோ’வென் றழைப்பமுன் நின்று

ஞான போனகம் அருளட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து ‘தந்தார் யார்’என
‘அவனைக் காட்டுவன் அப்ப வானார்
30
தோஒ டுடைய செவியன்’ என்றும்

பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.

2

அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு
பொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதுங்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்க்(கு)
அண்டத்தார் தாமார் அதற்கு.

3


ஆரணம் நான்கிற்கும் அப்பா லவனறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்கரி யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப் பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங் கடந்த கருப்பொருளே.

4

கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனுந்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறல்

5
மையிருள் நிறத்து மதனுடை அடுசினத்(து)

ஐவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி
அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய

10 கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்
பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி(சு)
எந்தைநீ இருக்க இட்டனன் இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்

15
அடையப் பரந்த ஆதிவெள் ளத்து

நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப
வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி

20
மற்றவர் உய்யப் பற்றிய புணையாய்

மிகநனி மிதந்த புகலி நாயக
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமயக்

25
கொழுந்தையும் உடனே கொண்டிங்(கு)

எழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.

5


மானும் மழுவுந் திருமிடற்றில் வாழுமிருள்
தானும் பிறையுந் தரித்திருக்கும் - வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்
உள்ளத்தே நின்ற ஒளி.

6

ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கவென் உள்ளம்வெள்ளம்
தெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாததொரு
களிவந்த வாஅன்பு கைவந்த வாகடை சாரமையத்(து)
எளிவந்த வாநங் கழுமல வாணர்தம் இன்னருளே.

7

அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி!
ஆரா இன்பத் தீராக் காதல்!
அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத்(து) ஆடகக் குடுமி

5 மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன் றுணர்த்துவன் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்

10
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்(து)
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியுந் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை; யான்அவர்

15
தந்தைய ராகியுந் தாய ராகியும்

வந்தி ராததும் இல்லை, முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை

20
யான்அவை

தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை
அனைத்தே காலமும் சென்றது; யான்இதன்
மேல்இனி
இளைக்குமா றிலனே நாயேன்?

25
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலுந்

தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்

30
இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின்

கடற்ப டாவகை காத்தல்நின் கடனே.

8

கடலான காமத்தே கால்தாழ்வார்; துன்பம்
அடலாம் உபாயம் அறியார்; - உடலாம்
முழுமலத்தை ஒர்கிலார் முக்கட் பெருமான்
கழுமலத்தைக் கைதொழா தார்.

9

தொழுவாள் இவள்வளை தோற்பாள் இவளிடர்க் கேஅலர்கொண்(டு)
எழுவாள் எழுகின்ற தென்செய வோஎன் மனத்திருந்தும்
கழுமா மணியைக் கழுமல வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக்கண்டு வந்ததென் றாலொர் வசையில்லையே.

10

வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து
வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற
மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்

5
புகலி நாயக இகல்விடைப் பாக

அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
மூவெயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்

10
நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக்
காமனை விழித்த மாமுது தலைவ
வானவர் அறியா ஆதி யானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறுங்கண்நாட் டத்துக்

15
காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை

யாயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்
போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்

20
எண்ணில் கோடி எனைப்பல வாகி

இல்லன உளவாய் உள்ளன காணாப்
பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்
அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்

25
குழிவழி யாகி வழிகுழி யாகி

ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற
வந்தாற் போல வந்த(து) எந்தைநின்
திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி

30
மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை

ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
கவராய்த் தோன்றுங் துணிவுபோன் றெனவே.

11

எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்
சினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப்
பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்
பூம்புகலி யான்இதழிப் போது.

12

போதும் பெறாவிடில் பச்சிலை

உண்டு; புனலுண்டெங்கும்

ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்

றேஇணை யாகச்செப்பும்

சூதும் பெறாமுலை பங்கர்தென்

தோணி புரேசர்வண்டின்

தாதும் பெறாத அடித்தா

மரைசென்று சார்வதற்கே.